புதுடில்லி: இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நிதி உதவி செய்வதாக, பா.ஜ.க. அரசியல் கட்சி கூறிய குற்றச்சாட்டை, அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் தற்போது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் அறக்கட்டளை, ஓசிசிஆர்பி போன்ற அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும், ராகுல் காந்தி இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை பாஜக நாடாளுமன்றத்தில் எழுப்பியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தனது எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது, “அமெரிக்க புலனாய்வு இதழான OCCRPக்கு 50% நிதி நேரடியாக அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இருந்து வருகிறது. எனவே, OCCRP-யின் செயல்பாடுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. மேலும், ஒரு OCCRP என்ற ஊடக நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்பதை பிரெஞ்சு புலனாய்வுப் பத்திரிகையாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மீதான பாஜகவின் குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்தியாவில் ஆளும் கட்சி இந்த குற்றச்சாட்டுகளை கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையில், அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான தொழில்முறை மேம்பாடு மற்றும் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியை ஆதரிக்கும் திட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்க அரசாங்கம் அந்த நிறுவனங்களின் தலையங்க முடிவுகள் அல்லது கட்டுரைகள் மீது எந்த செல்வாக்கையும் செலுத்தாது. அமெரிக்கா நீண்ட காலமாக உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தின் சாம்பியனாக இருந்து வருகிறது. சுதந்திரமான பத்திரிகை என்பது எந்தவொரு ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும். இதன் மூலம், அமெரிக்கா ஆக்கபூர்வமான விவாதத்தை ஊக்குவிக்கிறது மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புக்கூற வைக்கிறது.