2022-ம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் தொடர்பாக மாநில அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி, வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் ஒலி அந்த வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளை அகற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாங்க உத்தரவின்படி, உத்தரபிரதேசம் முழுவதும் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஒலிபெருக்கிகள் வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்பட்டன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

ஹோலி பண்டிகையின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும். அரசு நலத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 4 லட்சம் பெண்களின் திருமணத்திற்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 1.86 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை எஞ்சின் அரசால் உத்தரப்பிரதேசம் வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வாரணாசியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். 2026-ம் ஆண்டுக்குள் மைதானத்தை திறக்க வேண்டும். அதன்படி கட்டுமான பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.