மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பரம வைரிகளான இந்தியா–பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ம் தேதி மோதவிருக்கின்றன. ஆனால், இந்த ஆட்டத்திற்கு எதிராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை அறிவித்துள்ளார்.

அண்மையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், இந்திய எல்லையில் பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் அத்துமீறல் ஆகியவற்றை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் விளையாடுவது சரியல்ல என்ற கருத்து பல்வேறு தரப்புகளில் எழுந்துள்ளது. அதனை வலுப்படுத்தும் வகையில் தாக்கரே, “போரும் கிரிக்கெட்டும் ஒன்றாக இருக்க முடியாது. பிரதமர் மோடி ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றார், அப்படியிருக்க இப்போது எப்படி ஆட்டம் நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “கிரிக்கெட் போட்டியின் பெயரில் பணம் சம்பாதிக்கிறார்கள். இது தேசப்பற்று அல்ல, வியாபாரம் மட்டுமே” என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதனால் நாளை (செப்.14) சிவசேனாவின் மகளிர் அணி மும்பை தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், கிரிக்கெட்டை விட தேசம் முதன்மை என்ற கோஷங்களும் பல்வேறு இடங்களில் எழுந்தன. தாக்கரேவின் அறிவிப்பால், இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.