புதுடில்லி: வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய இ-பாஸ்போர்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்போர்ட் சேவா இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது சில மையங்களில் மட்டுமே சேவை வழங்கப்பட்டாலும், விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 2024 ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகமான இந்த திட்டம், தற்போது பல அலுவலகங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ்போர்ட் என்பது வழக்கமான பாஸ்போர்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு. இதில் வழக்கமான அம்சங்களோடு கூடுதலாக டிஜிட்டல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டின் முன் அட்டையில் தங்க நிற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். மேலும், ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் (RFID) மற்றும் அன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கைரேகை, டிஜிட்டல் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்ற தகவல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன.
மத்திய அரசு தெரிவித்தபடி, இது வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக அல்ல, மாறாக பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு உயர் தர பதிப்பு. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) விதிகளின்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் போலியான ஆவணங்களைத் தடுக்கவும் உதவுகிறது. சர்வதேச பயண செயல்முறைகளையும் எளிதாக்குவதே இதன் நோக்கம்.
விண்ணப்பிக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் புதிய கணக்கைப் பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா மையம் அல்லது அஞ்சல் அலுவலக மையத்தைத் தேர்வு செய்யலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பின், நேர்காணலுக்கான நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு எளிய செயல்முறை வழியாக இ-பாஸ்போர்ட்டைப் பெற முடியும்.