புதுடெல்லி: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வேக சோதனை கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கோட்டாவிலிருந்து ராஜஸ்தானின் லபான் ரயில் நிலையம் வரை 30 கிமீ தூரத்திலும், ரோகல்குர்த் மற்றும் கோட்டா இடையே 40 கிமீ தூரத்திலும் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது, ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் சென்றது. ரயில் பயணிகளுக்கு நீண்ட தூர பயணத்திற்கு உலகத்தரம் வாய்ந்த பயணத்தை வழங்கும் வகையில் இந்த சோதனைகள் இம்மாத இறுதி வரை தொடரும் என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வந்தே பாரத் ரயிலுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி கோப்பை வைக்கப்பட்டுள்ளது. புகையிரதம் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த போதிலும் நீர் நகரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிவேக ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான வசதிகளை இது எடுத்துக்காட்டுகிறது.