திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் 2021 மார்ச் முதல் 2024 மார்ச் வரை நடந்த ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அறிக்கையுடன் வீடியோ கிளிப்பிங் மற்றும் புள்ளி விவர ஆதாரத்தை நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் ஷியாமளா ராவ் வெளியிட்டார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான மாட்டு சாலையில் மாடுகள் குடிக்க பயன்படுத்தும் தண்ணீரில் பாசி மற்றும் புழுக்கள் இருந்தது. இதை அப்போதைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 2021 மார்ச் முதல் 2024 மார்ச் வரை தேவஸ்தானத்தில் பெரும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இறந்த மாடுகளின் விவரங்கள் மறைக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கான விதிகள் மீறப்பட்டன.

பொது மேலாளர் நிலை அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஐடி துறையின் தோல்வியால் பெரும் முறைகேடுகள் நடந்தன. ஒரு தரகர் சேவை டிக்கெட்டுகளை 50 முறை பெற்றுள்ளார். அவர் 200 முறை அறைகளைப் பெற்றுள்ளார். அத்தகைய புரோக்கர்கள் இல்லாமல், தரிசனம் மற்றும் அறைகளைப் பெறுவது சாத்தியமில்லை. 39 ஆயிரம் புரோக்கர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பசு நெய் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. பிரசாதமாக வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்புகளின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. சுவாமிக்கு வழங்கப்படும் நைவேத்தியப் பிரசாதம் இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்டதாகக் கூறி பல முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறியதாவது:-
தேவஸ்தான மாட்டுத்தாவணியில் 100 பசுக்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பூமனா கருணாகர ரெட்டி கூறிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது. சில நன்கொடையாளர்கள் பழைய மற்றும் மீட்கப்பட்ட பசுக்களை கோயிலுக்கு வழங்கினர். இப்படி பசு தானம் செய்வதால் மாதந்தோறும் சராசரியாக 15 பசுக்கள் இறக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டு 179 மாடுகள் இறந்தது எஸ்.வி. மாட்டு தொழுவம். 2025 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வயது மற்றும் நோய்களால் சுமார் 43 பசுக்கள் இறந்தன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 59 கன்றுகள் பிறந்துள்ளன, என்றார்.