புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ரஹாத்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு சென்ற விஜய கிஷோர் ரஹாத்கரை அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அவருக்கு வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மறைந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட பெண் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய கிஷோர் ரஹாத்கர், “இவ்வளவு பெரிய பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னால் முடிந்ததை செய்வேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் பாழ்மனம் கொண்டவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்.
இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு முன் பின்விளைவுகளை அவர்கள் பயப்பட வேண்டும். இதற்காக ஆணையம் தொடர்ந்து பணியாற்றும். கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது.
தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால் ஆணையம் தனது பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய கிஷோர் ரஹத்கர், பாஜகவின் தேசிய செயலாளராகவும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராகவும் இருந்தார். இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2007 முதல் 2010 வரை அவுரங்காபாத் மாநகராட்சி மேயராக பணியாற்றினார்.