புதுடெல்லி: டெல்லி சட்டசபை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சபாநாயகர் வேட்பாளராக ரோகிணி தொகுதி எம்எல்ஏ அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இதில், லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா இடைக்கால சபாநாயகராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் ரேகா குப்தா உட்பட அனைத்து புதிய எம்எல்ஏக்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் விஜேந்தர் குப்தாவின் பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார்.
இதை பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா உறுதிப்படுத்தினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், முதல்வர் ரேகா குப்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி ஆகியோர் மரபுப்படி விஜேந்தர் குப்தாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.