புதுடெல்லி: டெல்லியில் நேற்று கிராமீன் பாரத் மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- சாதியின் பெயரால் விஷத்தை பரப்பி சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இந்த சதிகளை முறியடித்து நமது கிராமங்களின் பாரம்பரியத்தை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும். பாஜக அரசு 2014 முதல் தொடர்ந்து கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் செய்த கடின உழைப்பின் பலனை நாடு இப்போது அறுவடை செய்து வருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான நுகர்வு இடைவெளி குறைந்துள்ளது. கிராமங்களில் உள்ளவர்களை விட நகர்ப்புற மக்கள் அதிகம் செலவிடுவார்கள் என்று முன்பு நம்பப்பட்டது. தொடர் முயற்சிகள் இந்த ஏற்றத்தாழ்வைக் குறைத்துள்ளன. 2011-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் நுகர்வு கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் இருந்தன.
கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி. அவை கடந்த அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டன. இது கிராமங்களிலிருந்து இடம்பெயர்வதற்கும், வறுமையை அதிகரிப்பதற்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது. 2012ல் 26 சதவீதமாக இருந்த கிராமப்புற வறுமை, 2024-ல் 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் நாடு வறுமையை குறைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பாரதீய ஜனதாவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கோரி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபரும், இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான விஷால் சிக்கா நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் அதன் தேவைகள் குறித்து சிக்கா பிரதமருடன் விவாதித்தார். பின்னர், சந்திப்பை குறிப்பிட்டு, பிரதமர் மோடி தனது எக்ஸ் மேடையில், “புதுமைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் செயற்கை நுண்ணறிவுத் துறையை வழிநடத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்றார்.