நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படுவோருக்காக, காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் சிறப்பு உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. இதே நேரத்தில், காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டதால், இந்தியா–நேபாளம் இடையிலான ஏர் இண்டியா, இண்டிகோ, நேபாள ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர்கள் உயிரிழந்தது மனதை உலுக்கும் சம்பவம் எனவும், நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேபாள மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக, இந்தியர்கள் யாரும் தேவையின்றி நேபாளம் செல்ல வேண்டாம் எனவும் மத்திய அரசு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. அங்கு விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்ற விருப்பம் இருநாடுகளிலும் வலியுறுத்தப்படுகிறது.