இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாகவே உள்ளது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று சனசபி மலைப்பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, தம்னாபோகி, ஐங்கன்போகி, சாந்தி கொங்பால் உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அப்பகுதியில் சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், ஹரிதாஸ் (37) என்ற காவலர் தோட்டா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல், உள்ளூர்வாசி ஒருவரும் காயமடைந்தார். கிறிஸ்துமஸ் தினத்திலிருந்தே தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மணிப்பூர் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு முதல்வர் பைரோன் சிங் உத்தரவிட்டிருந்தார்.