திருவனந்தபுரம்: கேரளாவில் சித்திரை விஷு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் கோவில்களில் விஷுகனி தரிசனம் நடைபெறும். காய்கறிகள், பழங்கள், புதிய ஆடைகள், பணம், நகைகள் போன்ற பொருட்களை பூஜையறையில் வைத்து காலையில் திறப்பதே விஷுகணி தரிசனம். இதை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதை முன்னிட்டு சித்திரை விஷு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் விஷுகனி தரிசனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு விஷுகணி தரிசனம் நடைபெற்றது.

இதையொட்டி சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விஷுகனி தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் காசுகளை வழங்கினர். இதனிடையே சபரிமலையில் வழிபடப்படும் தங்க டாலர்கள் விற்பனை நேற்று தொடங்கியது. கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தங்க டாலர் விற்பனையை துவக்கி வைத்தார். குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் விஷுகனி தரிசனத்தையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.