கேரள மாநிலம் பாலக்காட்டில் பாம்பு கடி சம்பவங்களால் ஏற்படும் மரணங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன், வனத்துறையின் தலைமையில் ஒரு சிறப்பான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலக்காடு சமூக வனவியல் பிரிவின் கீழ், புதிய பாம்பு தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா உரையாற்றினார்.
தன்னார்வலர்கள் பாம்பு கடித்த பிறகு அவசர சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார். இது போன்ற பயிற்சிகள் பாம்பு கடி மரண எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன் இருக்கவேண்டும் என்றும், பாம்பு மீட்பு நடவடிக்கைகள் வனத்துறையின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு வட்ட தலைமை வனப் பாதுகாவலர் விஜயானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி. அஜித் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தன்னார்வலர்களின் பணி சமூக நலனுக்காக முக்கியமானது என பாராட்டினார். மேலும் கோட்ட வன அலுவலர் ரவிக்குமார் மீனா, உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் மற்றும் சமூக வனவியல் துறை அதிகாரிகள் உரையாற்றினர்.
இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 73 புதிய பாம்பு தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இது போன்ற திட்டங்கள் பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்கில் அரசு, வனத்துறை மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது சமூக ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியமாகிறது.