புதுடில்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையில் வரும் 10ம் தேதி டில்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீஹாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கிருந்த வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டது. அப்போது, உயிரிழந்தோர் பெயர்கள், குடிபெயர்ந்தவர்கள், ஒரே நபர் பல இடங்களில் பெயர் சேர்த்தல் போன்ற தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 அன்று திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள், “தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படுகின்றன” என குற்றஞ்சாட்டின. ஆனால் தேர்தல் ஆணையம், “பிழை இல்லாத பட்டியல் உருவாக்குவதே நோக்கம். வெளிநாட்டவர்களை நீக்குவதே முக்கிய குறிக்கோள்” என விளக்கம் அளித்தது. உச்ச நீதிமன்றமும், ஆதார் மற்றும் ரேஷன் அட்டை விவரங்களை சரிபார்க்க பரிந்துரைத்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறவுள்ள சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான ஆலோசனையில், மாநிலங்களின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை, கடைசியாக எப்போது திருத்தம் நடந்தது, பட்டியல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதா, ஒரு ஓட்டுச்சாவடிக்கு எத்தனை வாக்காளர்கள் உள்ளனர், அதிகாரிகள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்பதற்கான விவரங்களை தேர்தல் கமிஷன் கேட்க உள்ளது.