டெல்லி: நாடாளுமன்றத்தில் தனது உரைக்கு பிறகு தமக்கு எதிராக அமலாக்கத்துறையை அனுப்பி ரெய்டு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்நாட்டில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். EDக்காக காத்திருப்பதாகவும், டீ, பிஸ்கட் கொடுப்பதாகவும் ராகுல் காந்தி தனது சமூக வலைதளமான எக்ஸ் கணக்கில் கிண்டலாக எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சக்ரவ்யூஹம் உரையால் நெறய பேர் கோபமடைந்ததாவும் , விசாரணை அமைப்புகளை ரெய்டு செய்யச் சொன்னதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் ராகுல் காந்தி
வயநாடு பேரிடர் எதிரொலியாக வயநாடு வந்த ராகுல் காந்தி கேரளாவில் தங்கியுள்ளார். ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று வயநாட்டில் பல்வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.
நிவாரணப் பணிகள் தொடர்பாக காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் தொண்டர்களை இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இருவரும் முண்டகை வனச்சரக அலுவலகத்தையும் பார்வையிடுவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மேப்பாடி கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளனர். நேற்று, இருவரும் நிலச்சரிவு பகுதியான சூரல் மலையை பார்வையிட்டனர்.