கொல்கத்தா: ‘யாரையும் காயப்படுத்தும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். தனது 10 நாள் பயணத்தின் போது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். பேசுகையில், “இந்து அமைப்புகளில் நாம் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். நாட்டின் பொறுப்பான சமூகம் இந்து சமூகம். இந்துக்கள் இந்தியாவின் வாரிசுகள். அவர்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம்” என்றார்.
மேலும், “இந்தியாவிற்கு ஒரு இயல்பு உண்டு. இந்துக்கள் உலகின் பன்முகத்தன்மையுடன் இணக்கமாக வாழ்கிறார்கள். இப்போதெல்லாம், வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்கிறோம். இந்துக்கள் வேற்றுமையில் ஒற்றுமையைப் புரிந்துகொள்கிறார்கள்” என்றார்.
இந்த பண்புகள் இந்தியாவை வரையறுக்கின்றன என்றும், ‘யாரையும் காயப்படுத்தும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்’ என்றும் அவர் வலியுறுத்தினார். “ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். நாட்டின் வேலையைச் செய்ய சமூகம் முன்வர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.