ஜூன் மாதத்தில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், வடமேற்கு இந்தியாவில் பருவமழை தொடங்கும் என்றும், இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. பல்வேறு இடங்களில் வெப்ப அலைகள் உருவாகின.
குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 20 முதல் 38 நாட்கள் வரை தொடர்ந்து வெப்ப அலை வீசி, மக்களை வாட்டி வதைத்தது. கடந்த 14 ஆண்டுகளில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. மே 16 முதல் ஜூன் 5 வரை நீடித்த வெப்ப அலையால் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் மழைப் பற்றாக்குறை இருந்ததே இத்தகைய தகிப்புக்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் காரீஃப் பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வரும்நிலையில், பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிர மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜூலை மாதத்தில் பெய்யும் அதிகபடியான மழையால், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் மலையடிவார மாநிலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.