புதுடில்லி: இந்தியாவில் டிஜிட்டல் வழி பண மோசடி சம்பவத்தில், முதல் முறையாக 9 சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2024 அக்டோபரில், ஓய்வு பெற்ற விஞ்ஞானி பார்த்தா குமார் முகர்ஜி ரூ.1 கோடி பணத்தை ஆன்லைன் மோசடிக்கிழப்பட்டதாக புகார் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இம்தியாஸ் அன்சாரி, ஷாகித் அலி ஷேக், ஷாருக் ரபிக் ஷேக், ஜதின் அனுப், ரோஹித் சிங், ரூபேஷ் யாதவ், சாஹில் சிங், பதான் பானு மற்றும் அசோக் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தன.
மேற்குவங்க நீதிமன்றம் நடத்திய விசாரணை பிப்ரவரி 24, 2025 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இது டிஜிட்டல் குற்றங்களில் இந்தியாவின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஒரு வரலாற்றுச் செயலாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு பேசப்படுகிறது.
இந்த தீர்ப்பு குறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் பிவாஸ் சாட்டர்ஜி, “இது எங்களுக்கான மைல்கல் தருணம். டிஜிட்டல் மோசடியை தடுக்க நீதிமன்றம் எடுத்திருக்கும் இந்த உறுதியான நிலைபாடு நாட்டில் அதிகரிக்கும் சைபர் குற்றங்களுக்கு எதிரான ஒரு முக்கியமான அத்தியாயமாகும்” எனக் கூறியுள்ளார்.