சென்னை: வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய அவசியம் என்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முஸ்லிம்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொல்வது என்று முழு நேர பணியாக நாடு முழுவதும் காவி பயங்கரவாத கும்பல் செயல்பட்டு வருகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் அன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட அச்சம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாக காணப்படுகின்றது. சமீபத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட சாவா என்ற ஹிந்திப் படம் வெளியானதை அடுத்து, அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பாஜகவின் மத்திய அமைச்சர்களும், மகாராஷ்டிர முதல்வரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகைய போக்கு சர்வாதிகாரத்தின் உச்சம். பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திட்டமிட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி, ராம நவமி, ஹோலி போன்ற இந்து பண்டிகைகளின் போது மசூதிகளைத் தாக்கி முஸ்லிம் மக்களைக் கொன்று கலவரங்களை நடத்தி வருகிறது பாஜக. அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்றும் சதியும் அதன் தொடர்ச்சிதான். இந்தக் கலவரங்கள் மூலம் பெரும்பான்மை இந்து மக்களிடையே இந்து மதவெறியைத் தூண்டி, அவர்களைத் தங்கள் பக்கம் இணைத்துக்கொள்வது மட்டுமின்றி, முஸ்லிம்களை எந்த உரிமையும் இல்லாத இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றவும் முயல்கின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய அவசியம் என்ன? அரசியல் ஒழுக்கம் இல்லை; ஆன்மிக ஒழுக்கம் இல்லாத பாஜக அரசு, முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, வரும் சட்டசபை தேர்தல் மூலம் இந்திய யூனியனில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைக்க நினைக்கிறது. எனவே, ஒன்றியத்தில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி, நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.