புதுடில்லி: பயங்கரவாதிகள் எதிராக உளவு மென்பொருள்களை பயன்படுத்துவதில் தவறு என்னவென்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2021ல் வெளியான ஒரு சர்வதேச புலனாய்வு அறிக்கையின் படி, இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளில் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. உலகம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்டோர், அதில் 300 இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பிடித்தன.

இந்த தகவல் வெளியாகியதும், இந்திய அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்பட, மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இதையடுத்து, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மேற்பார்வைக் குழுவும், மூன்று நிபுணர்களைக் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டன.
இந்த குழுவினர் 27 பேரின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது, பெகாசஸ் பயன்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஐந்து மொபைல்களில் வேறு வகை உளவு வைரஸ்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த அமர்வில், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் சில முக்கியக் கருத்துகளை முன்வைத்தனர். தற்போது நம் நாடு மிகுந்த பாதுகாப்பு சவால்கள் சந்திக்கும் நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளை கண்காணிக்க இந்த வகை உளவு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை என்றது அமர்வு.
இதே நேரத்தில், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் எந்தவொரு தகவலும் வெளிவரக் கூடாது எனவும், அதனால் நிபுணர் குழுவின் முழு அறிக்கையை வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில், யாராவது சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டிருந்தார்களா என்பதை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த விடயத்தில், நிபுணர் குழு அறிக்கையின் எந்த அளவு பகுதிகள் வெளியிடப்படலாம் என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் விரைவில் ஆலோசிக்கவுள்ளது. வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.