ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பதே எனக் கூறினார். குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், நவராத்திரி பண்டிகையின் தொடக்க நாளில் மக்களுடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்தார். தனது பிறந்தநாளில் வாழ்த்துக்களை தெரிவித்த மக்களுக்கும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

மோடி தொடர்ந்து பேசியதாவது, தன்னம்பிக்கையே இந்தியாவின் வளர்ச்சிக்கான மருந்து. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடியில் போனதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு ரூ.6 லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இது நமது பாதுகாப்புத் துறை பட்ஜெட்டிற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்தும் நோக்கில் பெரிய கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற கப்பல்கள் நாட்டின் வலிமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாகவும், துறைமுகங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியா உலகளாவிய கடல்சார் சக்தியாக எழுவதற்கான பாதையில் இருப்பதாகவும் உறுதியளித்தார்.
முடிவில், இந்தியாவுக்கு எந்த வெளிநாட்டு எதிரியும் இல்லை. ஆனால் மற்ற நாடுகளை சார்ந்திருப்பதே மிகப்பெரிய எதிரி என்று மோடி வலியுறுத்தினார். அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவுக்கு திறன் குறைவில்லை, அதனைச் சரியான முறையில் பயன்படுத்தினால் நாடு தன்னிறைவு அடைந்து உலகளவில் முன்னேறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.