மாண்டியா : “”மக்கள் குறைதீர் முகாமின் போது, அதிகாரிகளை அனுப்பாத மாநில அரசு. அவர்கள் அழைத்தால், காவிரி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்ல வேண்டுமா? எனது கூட்டத்திற்கு, மாநில அதிகாரிகளை அனுப்பவில்லை என்றால், மாநில வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய முடியும்,” என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
மாண்டியாவில் வெற்றி பெற்ற குமாரசாமி தற்போது மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு நேற்று மாண்டியா பாண்டவபுரத்தில் ம.ஜ.த தொண்டர்கள் பாராட்டு விழா நடத்தினர். விழாவிற்கு வந்த அவருக்கு பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
விழாவில் குமாரசாமி பேசியதாவது:
என்னை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கி ஆசிர்வதித்த கட்சியினர் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னிடம் வந்து கஷ்டம் என்று சொன்னவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன்.
சமீபத்தில், மாண்டியாவில் நான் நடத்திய குறை தீர்க்கும் முகாமில், நிதியுதவி கேட்டு பலர் மனு அளித்துள்ளனர். கவலைப்பட வேண்டாம்; கண்டிப்பாக உதவி கிடைக்கும். மூன்று முறை இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் உயிருடன் இருந்தால், அது விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவுவதற்காகவே.
காவிரி நதிநீர்ப் பிரச்னைக்காக நடைபெற்ற போராட்டங்களில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முக்கியப் பங்காற்றினார். விவசாயிகளுக்காக அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்திலும் போராடிய தலைவர் தேவகவுடா.
120 வருட பிரச்சனை
நான் மத்திய அமைச்சராக இருந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால் சில கர்நாடக அமைச்சர்கள் 120 ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணச் சொல்கிறார்கள். நீங்களே ஆள்கிறீர்கள். அதைத் தீர்ப்பது உங்களுடையது. ஒன்றும் செய்யவில்லை, அனைத்தையும் ஏமாற்றி கொள்ளையடித்து விட்டோம் என்கிறார்கள்.
நடவடிக்கை
சிறிது நேரம் கொடுங்கள். காவிரி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாமின் போது, மாநில அரசு அதிகாரிகளை அனுப்பவில்லை. அப்படி இருக்கும்போது, அவர்கள் அழைத்தால், காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் போக வேண்டுமா? எனது கூட்டத்திற்கு மாநில அதிகாரிகளை அனுப்பவில்லை என்றால், மாநில வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய முடியும். ஆனால், சமீபத்தில் அண்டை மாநிலமான ஆந்திராவுக்குச் சென்றிருந்தபோது, முதல்வர் சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவ வாருங்கள் என்று அடிக்கடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி என்னை கவுரவித்து, மத்திய அமைச்சரவையில் 9வது இடத்தை எனக்கு வழங்கினார். இது மாநில மக்களுக்கு கிடைத்த கவுரவம். இவ்வாறு அவர் பேசினார்.
500 கிலோ ஆட்டிறைச்சி
இந்த பாராட்டு விழாவிற்கு ஏராளமான ம.ஜ.த தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. கேழ்வரகு களி, மட்டன் குழம்பு, சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி, ஆட்டு குடல் கறி, முட்டை, வெள்ளை சாதம், வாழைப்பழம், பாயசம் வழங்கப்பட்டது. இதற்காக, 500 கிலோ ஆட்டிறைச்சி, 250 கிலோ சிக்கன், ஒரு லட்சம் முட்டைகள் வாங்கப்பட்டன.