சென்னை : எஸ்டிபிஐ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சென்னை உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர்
எஸ்டிபிஐ கட்சிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சென்னை உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் எஸ்டிபிஐ (இந்திய சமுதாய ஜனநாயக கட்சி) நிறுவப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இக்கட்சி, தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரன்ட் ஆப்’ இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பிஎப்ஐ அமைப்பின் சட்டவிரோத பணத்தை பயன்படுத்தியதாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸியை (55) அமலாக்கத் துறை கடந்த திங்கட்கிழமை கைது செய்தது. அவரை 6 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு, பிஎப்ஐ – எஸ்டிபிஐ இடையே இயல்பான உறவு இருப்பதாகவும் எஸ்டிபிஐ மூலமாக பிஎப்ஐ குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அமலாக்க துறை குற்றம் சாட்டியது.
முன்னதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தில், “பிஎப்ஐ-யின் அரசியல் பிரிவுதான் எஸ்டிபிஐ. பிஎப்ஐ அமைப்பிடம் இருந்து நிதி பெறுவதுடன் அதன் கட்டுப்பாட்டில் எஸ்டிபிஐ உள்ளது. ஒரு அமைப்பில் இருப்பவர் மற்றொரு அமைப்பிலும் உறுப்பினராக இருப்பார். ஒரு அமைப்பின் சொத்து மற்றொரு அமைப்பால் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தது.
இந்நிலையில் பைஸியிடம் நடத்திவரும் விசாரணையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
டெல்லியில் எஸ்டிபிஐ தலைமையகம் உட்பட 2 இடங்கள், கேரளாவில் திருவனந்தபுரம், மலப்புரம், ஆந்திராவில் நந்தியால், ஜார்க்கண்டில் பாகூர், மகாராஷ்டிராவில் தானே மற்றும் பிற மாநிலங்களில் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஜெய்ப்பூர் என 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.