இந்திய அரசாங்கம் மின்சார வாகன (EV) துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய கொள்கைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை 110% இலிருந்து 15% ஆக குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த முயற்சி மூலம் அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) உள்ளிட்ட முன்னணி மின்சார வாகன நிறுவனங்கள் பெரும் ஆதாயம் அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விரைவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு இறக்குமதி வரியை குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் முன், சில முக்கிய நிபந்தனைகளை நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் தயாரிப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதும் மற்றொரு முக்கிய நிபந்தனையாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உறுதிசெய்யப்படும் என அரசு நம்புகிறது.
இந்த புதிய கொள்கையால் டெஸ்லா மட்டுமல்லாது, வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் உள்ளிட்ட பிற மின்சார வாகன நிறுவனங்களும் இந்திய சந்தையில் நுழைய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் பெரிய அளவிலான உற்பத்தி நிலையம் அமைத்து வருகிறது.
இந்த வரி குறைப்பால், இன்னும் பல சர்வதேச மின்சார வாகன நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாகவும், இது நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கொள்கை நடைமுறைக்கு வந்தால், இந்திய மின்சார வாகன சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஒருபுறம், இந்தியாவில் தயாரிப்பு தொழில் வளர்ச்சியை தூண்டும் விதமாக இது அமையலாம். மறுபுறம், சர்வதேச நிறுவனங்களின் செறிவு அதிகரிக்கும் என்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்.