புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் இடையே உறவு சீராக இல்லை என்ற பேச்சு டில்லி அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பகவத், “வயது 75 கடந்த தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்” என்று குறிப்பிட்டதாக கூறப்பட்டது. இதனால், பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் தாமதமாகி வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மீடியாவை சந்தித்த மோகன் பகவத், “மோடிக்கும் எனக்கும் சண்டை இல்லை; ஆனால் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருவரும் ஒரே பாதையில் நடக்க வேண்டும்” என்றார். மோடி என நேரடியாக குறிப்பிடாமல், “இரண்டு அமைப்புகள்” என்ற சொற்றொடரை பயன்படுத்தியது மேலும் பேசுபொருளாக அமைந்தது. அதேசமயம், 75 வயது ஓய்வு விவகாரத்தில் தான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அது தன்னுடைய கருத்தல்ல, ஒருவரின் கிண்டல் பேச்சு என்பதை மட்டும் தெரிவித்ததாகவும் பகவத் விளக்கம் அளித்தார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அது பெரிய சண்டையாக மாறவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட தாமதம், இரு தரப்பினரின் உட்கருத்து முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவே மதிப்பிடப்படுகிறது. “ஆர்.எஸ்.எஸ் தான் பாஜகவின் தலைவர் தேர்வில் முடிவெடுக்கும் என்றால் இத்தனை தாமதம் ஏற்பட்டிருக்காது” எனவும் டில்லி வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே சித்தாந்தத்தில் இணைந்தே செல்ல வேண்டும் என்ற வலியுறுத்தல் வெளிப்படுகிறது. சில மூத்த தலைவர்கள், “மோடி–பகவத் இடையிலான நீடித்த முரண்பாடு கட்சிக்கும் அரசுக்கும் நல்லதல்ல” என்று எச்சரித்துள்ளனர். இதற்குப் பிறகே பகவத் தனது நிலைப்பாட்டை ஊடகங்கள் முன் தெளிவுபடுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.