90 இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசிய மாநாட்டு எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் குழு தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார். அப்போது அவரது கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, யூனியன் பிரதேசத்தில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் 19, 2018 அன்று, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணி உடைந்ததை அடுத்து, இப்பகுதியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
செய்தியாளர் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு காஷ்மீரை ஒன்றிணைத்து தேர்தலின் போது பரப்பப்படும் வெறுப்பை முடிவுக்கு கொண்டு வருவதே எங்களது முன்னுரிமை. மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும், இதனால் அரசு சரியாக செயல்பட முடியும், நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம். அவர் கூறியது இதுதான்.