ராஜஸ்தானின் நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகளான 23 வயதான மோனா புகாலியா, சிறு வயதிலிருந்தே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருந்தார். அந்த கனவை நிறைவேற்ற பல முறை முயற்சித்தும், காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனார். தனது தோல்வியை ஜீரணிக்க முடியாமல், சமூக வலைதளங்களில் தேர்ச்சி பெற்றதாக பொய்யான செய்தியை பரப்பினார். அதனால் வந்த பாராட்டுகள் அவரது மனதில் புதிய ஆசைகளை கிளப்பின.
இதையடுத்து மோனா, தனது பெயரை “மூலி தேவி” என மாற்றிக் கொண்டு போலி ஆவணங்களை உருவாக்கினார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்ததாகக் கூறி, ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் போலியாக நுழைந்தார். இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, வாட்ஸ் அப் குழுக்களிலும், அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்களிலும், ரீல்ஸ்களில் ஒரு உண்மையான சப்-இன்ஸ்பெக்டராகவே நடித்துள்ளார். ஆனால், உள்ளமைப்புக் கூட்டங்களில் மட்டும் தவிர்த்திருக்கிறார்.
இவ்வளவு சீராக நடத்திய மோசடி, வாட்ஸ்அப் குழுவில் மற்றொரு பயிற்சியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கவனத்துக்குவந்தது. சந்தேகப்பட்ட அந்த பயிற்சியாளர் மோனாவின் அடையாளத்தை விசாரிக்க தொடங்கினார். அவரது புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மோனா புனைபெயர், போலி ஆவணங்கள், போலி சீருடைகள், 7 லட்சம் ரூபாய் மற்றும் போலீஸ் தேர்வுக்கான வினாத்தாள்களுடன் மாட்டிக்கொண்டார்.
மோசடிக்குப் பின்னால் இருந்த உண்மை காரணமாக, தனது குடும்பத்தைத் திருப்திப்படுத்த வேண்டும், போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையை பெற வேண்டும் என்பதே காரணமென மோனா ஒப்புக்கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், நாட்டு அளவில் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகளையும், இளைஞர்களின் கனவுகள் எவ்வளவு கடுமையாக மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.