சென்னை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன. அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் நிலைத்தன்மை குறையும் காரணத்தாலும், டாலரின் மதிப்பு மாற்றமடையும் சூழலிலும் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது. டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்டின் 2025 ஜூலை அறிக்கையின் படி, உலக தங்க சந்தையில் இந்தியாவின் பங்கு 15% ஆக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 23 டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அந்நிய செலாவணியின் கையிருப்பு சுமார் 12.5 டிரில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 65% நகைகள் வடிவில் உள்ளன. இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கம் வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளது. உலக பொருளாதாரம் மோசமாகி வருவதால், சர்வதேச சந்தைகளில் எதிர்பாராத சூழல் உருவாகி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை அதிகமாக குவிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, 2020 இல் 653 டன்னிலிருந்து 2025 மார்ச் வரை 880 டன்னாக உயர்ந்துள்ளது.
இந்தியா உலக தங்க தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது; 2015-ல் பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணியில் தங்கம் 11.35% ஆக உயர்ந்துள்ளது, இது 2021-ல் 6.86% ஆக இருந்தது. இந்தியாவின் வேகமான வளர்ச்சி சீனாவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
ரிசர்வ் வங்கி தங்கம் வாங்கும் முக்கிய காரணம், டாலரின் மதிப்பு நிலைத்தன்மை இல்லாத சூழல் மற்றும் தங்கத்தின் நிலைத்தன்மை. அமெரிக்க பங்குச்சந்தையின் மாற்றங்கள் காரணமாக மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கத்தின் மதிப்பு சமீபத்தில் ஒரு வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இது மொத்த மதிப்பை ரூ.6,88,496 கோடியாக மாற்றியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைத் தடுக்க இந்தியா தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடுகிறது. 2024-25 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா அமெரிக்காவுக்கு 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளதுடன், 41.62 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதனால் 34.75 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத் தடை குறைக்கும் முயற்சியில் இந்தியா அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தங்க மற்றும் வெள்ளி கையிருப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.