புது டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 57,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அரசு பொது நிலங்கள் உள்ளன. இதில், கிராம சபை நிலம், குளங்கள், கோட்டைகள், உரக்குழிகள் மற்றும் சுடுகாடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைக்காக, பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை இயக்குநரால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது 75 மாவட்ட அதிகாரிகள், அரசு நில மேலாண்மைப் பிரிவின் துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. அதில் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதல்வர் யோகி, ‘இந்த அநீதியான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை பிறப்பித்த பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை இயக்குநர் சுரேந்திர நாத் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்பிற்கு எதிராகவும், எந்தவொரு சமூகம் அல்லது மதத்திற்கு எதிராகவும் உத்தரவுகளை பிறப்பிப்பது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.
“எதிர்காலத்தில், எந்தவொரு அரசாங்கமும் அதன் கடிதப் பரிமாற்றத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய அத்தகைய மொழியைப் பயன்படுத்தக்கூடாது. அரசாங்கத்தின் சார்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, அரசியலமைப்பு மதிப்புகள், பாரபட்சமற்ற தன்மை மற்றும் நிர்வாக ஒழுக்கம் ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார்.