டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது சமீபத்திய பேச்சுவார்த்தையில் ஷேக் ஹசீனா சமூக வலைதளங்களில் பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி, சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த முடியாது என பதிலளித்ததாக கூறினார்.

லண்டனில் உள்ள சாத்தம் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், முகமது யூனுஸ் செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, “ஷேக் ஹசீனாவை நீங்கள் இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம். அவரை நீக்க வேண்டும் என நாங்கள் கேட்டதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் அவர் பேசுவதை நிறுத்துங்கள்” என்று கேட்டதாகவும், மோடி அதற்கு “இது சமூக வலைதளம், அதை கட்டுப்படுத்த இயலாது” என்று பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.
வங்கதேசம் தற்போது ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்திய அரசுக்கு அதிகாரபூர்வமாக கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து சட்ட நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலும் பல குற்றங்கள் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளின் கீழ் நடைபெறுவதாக யூனுஸ் கூறினார்.
அதற்குட்பட்ட எந்த செயலும் சட்டம் மற்றும் நடைமுறைப்படி இருக்க வேண்டும் என்பதில் அவர் வலியுறுத்தினார். கோபத்தில் எதையும் செய்யக்கூடாது என்றும், இந்தியாவுடன் நல்லுறவை தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்தியா ஒரு அண்டை நாடு என்பதால், அவர்களுடன் எதிர்மறையான நிலையில் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், சில பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் வங்கதேசத்தில் பதட்டத்தை ஏற்படுத்துவதாகவும், பெரும் கோபத்தை உண்டாக்குவதாகவும் யூனுஸ் குற்றம் சாட்டினார். இந்த கோபங்களை சமாளிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் எதிர்பாராத நேரத்தில் எதையாவது அவர்கள் சொல்வதும் செய்பதும் கோபத்தை மீண்டும் எழுப்புகிறது என்றும் தெரிவித்தார். அமைதி மற்றும் நிலைத்த உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம் என அவர் முடிவில் கூறினார்.