சண்டிகர் நகரை அட்டகாசமாகவே அதிரவைத்துள்ள ஒரு சம்பவமாக, ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஹரியானா போலீசார் அவரை கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பின்னணியாக, டில்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் ஜோதி மல்ஹோத்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. டேனிஷின் உதவியுடன் அவர் 2024ல் பாகிஸ்தான் விசா பெற்று, லாகூர், ராவல்பிண்டி, பரூக்காபாத் போன்ற பகுதிகளை சுற்றிப் பார்த்தார். அவர் பயணத்தின் போது பாகிஸ்தானில் ‘வி.ஐ.பி.’யைப் போல் நடத்தப்பட்டதுடன், போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் சீனாவுக்குப் பயணித்திருந்ததால், மத்திய உளவுத்துறையின் கண்காணிப்பு பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹரியானா ஹிசார் மாவட்ட எஸ்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஜோதி மல்ஹோத்ரா 2023 முதல் பாகிஸ்தான் பயணங்களை அடிக்கடி மேற்கொண்டிருந்தார். அவரது வருமானமும், பயணச் செலவுகளும் பெரிதும் முரணாக இருப்பதாகவும் கூறினார். பாகிஸ்தானின் உளவுத்துறை சமூக வலைதள பிரபலங்களை பயன்படுத்தி உளவு நடவடிக்கைகளை நடத்த முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதே நேரத்தில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது கூட, ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா மறுத்து, “என் மகள் எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு” என்று கூறினார்.
மேலும், ஜோதி மல்ஹோத்ரா சமீபத்தில் ஒடிஷாவுக்கும் பயணம் செய்தார். அவருடன் புரியைச் சேர்ந்த யு டியூப் சேனல் நடத்தும் பெண்ணும் இருந்தார். பின்னர் அந்த பெண்ணும் பாகிஸ்தானுக்குச் சென்றதான தகவலை ஹரியானா போலீசார் ஒடிஷா போலீசாரிடம் பகிர்ந்தனர். தற்போது அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.