வங்கதேசத்தில் அதிகம் விளைச்சல் தரும் ஹரிபங்கா மாம்பழங்களை, அந்த நாட்டு தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். இதன் மூலம், இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை மீண்டும் உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி மாணவர் போராட்டத்தில் வீழ்ந்தது. அவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவாகியது. யூனுஸ் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் தொடர்பை விரிவாக்க முயற்சிக்கிறார். 1971 பாகிஸ்தானிலிருந்து பிரிந்ததிலிருந்து முதன் முறையாக பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகளை உருவாக்கியுள்ளார். இதனால் இந்தியா-வங்கதேச உறவுகள் பலவீனமடைந்துள்ளன.
இந்த சூழலில் பாங்காக் நகரில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் யூனுஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் ஹசீனாவின் பதவிநீக்கம் பிறகு முதன்முறையாக சந்திக்கின்றனர். மோடி, இந்தியா உறவை மேம்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரச்சனைகளை நேர்மறை நிலையில் விவாதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
வங்கதேச அரசு இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக ஹரிபங்கா மாம்பழங்களை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில், இந்தாண்டும் ஆயிரம் கிலோ மாம்பழங்களை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இவை நாளை இந்தியா வந்தடையும் என டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் தெரிவித்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், திரிபுரா முதல்வர் மாணிக் சஹாவுக்கும் மாம்பழங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உறவில் ஏற்பட்ட பதற்றத்தை சமாளிக்க மாம்பழங்கள் அனுப்பப்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இது நன்முறையில் உறவுகளை மீண்டும் கட்டமைக்க உதவும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.