ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தோல் வகை இருக்கும். சிலருக்கு மிகவும் வறண்ட சருமம், சிலருக்கு எண்ணெய் பசை சருமம், சிலருக்கு இவை இரண்டும் கலந்திருக்கும். ஒவ்வொரு தோல் வகையும் வெவ்வேறு தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், முகப்பருவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
முகப்பரு வலியை மட்டுமல்ல, ஒருவரின் அழகையும் கெடுக்கும். முகத்தில் பருக்கள் வருவதற்கு அதிகப்படியான எண்ணெய்யும் ஒரு காரணம் என்பதால், இந்த எண்ணெயை நீக்க சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். அதுவும் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும்போது, முகப்பருக்கள் தடுக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும். இப்போது முகப்பருவைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.
1. அவகேடோ மற்றும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு, அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை எடுத்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பிறகு 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின் லேசான க்ளென்சர் மூலம் முகத்தை கழுவி, பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் இருமுறை இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.
2. தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பின் தண்ணீரில் முகத்தை கழுவி, தயாரித்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1/2 கப் திடமான தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். முகத்தை தண்ணீரில் கழுவிய பின், கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள், உங்கள் முகம் பளபளப்பாகவும், பருக்கள் இல்லாமலும் இருக்கும்.