சென்னை: கர்ப்ப காலம் பெண்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் மிக முக்கியமான காலம். அந்த காலகட்டத்தில் உடல்ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்படி, கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. அதனை இயற்கையான வழியில் சரிப்படுத்தலாம்.
அத்திப்பழம், பேரீச்சம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை மலச்சிக்கலைப் போக்குவதோடு, தாய்க்கு ஏற்படும் ருசியின்மை, ரத்தக்குறைபாடு, சோர்வு ஆகியவற்றை நீக்கி தாய் – சேய் நலத்தையும் மேம்படுத்தும். முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவற்றை நன்கு வேக வைத்து தாளித்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். சீரகம் 25 கிராம், சோம்பு 25 கிராம் அளவில் முக்கால் லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அது 400 மில்லியாகும் வரை சுண்ட வைத்த பின் 100 மில்லி வீதம் நாளொன்றுக்கு நான்கு வேளை அந்த நீரைக் குடித்து வரலாம். அப்படியாகக் குடித்து வருவதன் மூலம் மலச்சிக்கல் சரியாவதோடு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீரகத் தாரைத் தொற்று மற்றும் பொய் பிரசவ வலி ஆகியவை ஏற்படாது. மட்டுமின்று சுகப்பிரசவத்துக்கும் வழிவகை செய்யும். கீரை வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
குறிப்பாக மணத்தக்காளிக் கீரை மலச்சிக்கலுக்கு உகந்தது. ஆனால் கீரை எளிதில் செரிமானமாகாது என்பதால் நன்கு மென்று சாப்பிட வேண்டும். உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம்.