சென்னை: தலைமுடி பலவீனமா இருப்பவர்களுக்கு அதை சரி செய்ய, பலப்படுத்த சில எளிய வழிமுறைகள்.
ஒருவருக்கு சரும ஆரோக்கியத்தைப் போலவே தலைமுடியின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமாகும். தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருந்தால் தான் முடி உதிரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், மன அழுத்தம் ஆகியவற்றால் தலைமுடியானது பலவீனமாகி, தலையில் கையை வைத்தாலே கொத்தாக முடியை கையில் பெற நேரிடுகிறது.
மேலும் பலவீனமான முடி பல தலைமுடி பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். நீங்கள் உங்களின் தலைமுடியை வலிமையாக்க நினைக்கிறீர்களா? அதுவும் இயற்கை முறையில் தலைமுடியை வலிமையாக்க வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே பலவீனமான தலைமுடியை பலப்படுத்தும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் முடியை விரைவில் வலுவாக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்: நாம் அனைவருமே தலைமுடிக்கு பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடிக்கு ஊட்டமளித்து, பலவீனமாக இருக்கும் முடியை பலப்படுத்தும். அதுவும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்து, முடியை மென்மையாகவும், வலிமையாகவும் ஆக்கும்.
அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஈரமான தலைமுடியில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் ஷவர் கேப்பை தலையில் அணிந்து 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
நறுமண எண்ணெய் மசாஜ்: அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் இவை மயிர்கால்களை வலிமையாக்கவும், சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்யவும் உதவுகிறது. நீங்கள் உங்கள் முடியை அடர்த்தியாக்கும் இயற்கை வழியை தேடிக் கொண்டிருந்தால், நறுமண எண்ணெயால் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
அதற்கு 4 டீஸ்பூன் கிரேப்சீட் எண்ணெய், 2 துளிகள் தைம் அத்தியாவசிய நறுமண எண்ணெய், 2 துளிகள் சீடர்வுட் அத்தியாவசிய நறுமண எண்ணெய், 1/2 டீஸ்பூன் ஜொஜோபா எண்ணெய், 3 துளிகள் லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் மற்றும் 3 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை ஒன்றாக கலந்து, அந்த எண்ணெய் கலவையால் தலைக்கு மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துண்டால், தலைமுடியைச் சுற்றி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.