கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பம், அதிக வியர்வை மற்றும் தூசியால் சருமம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இதில் பருக்கள், சன்பர்ன், ரேஷஸ் மற்றும் டேனிங் போன்றவை முக்கியமானவை. இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பலர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பல காஸ்மெடிக் தயாரிப்புகளில் உள்ள ரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே, இயற்கை பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதும், நன்மை தருவதும் ஆகும்.

இயற்கை பராமரிப்பு கூறுகளில் முக்கியமானது கற்றாழை. இது சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் அளிக்கிறது. வெயிலால் ஏற்படும் எரிச்சல் மற்றும் பாதிப்புகளை குறைக்கிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகள் முகப்பரு, தழும்புகள், பிக்மென்டேஷன் மற்றும் டேனிங் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகின்றன. தொடர்ந்து முகத்தில் தடவுவதால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
கற்றாழையை வெவ்வேறு இயற்கை பொருட்களுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தலாம். முல்தானி மெட்டியுடன் கலந்து பயன்படுத்தும் போது முகப்பரு மற்றும் சுருக்கங்கள் குறையும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து முகத்தில் 15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டருடன் கற்றாழையை கலப்பதும் ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி முகத்தில் 15–20 நிமிடங்கள் தடவ வேண்டும். இது தோல் எரிச்சல் மற்றும் சிவத்தலை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நிறமாற்றங்களை நீக்கி சருமத்தை ஒப்போட்டமாக மாற்றும். 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் சாறுடன் சேர்த்து பயன்படுத்தினால், குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் தரும். ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறு சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 15–20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ வேண்டும்.
தேனுடன் கலந்து பயன்படுத்தினால் முகப்பரு மற்றும் டேனிங் குறையும். ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும்.
இவை அனைத்தும் இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறைகள் என்பதால், கோடையில் சருமத்தை பாதுகாக்க இவை உதவியாக இருக்கும். இருப்பினும், இவை மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது. பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.