மாதவிடாய் என்பது இயற்கையான உடல் செயல்முறை. பெண்கள் பருவமடைந்து இனப்பெருக்கம் செய்யத் தயாராகும் தருணத்தில் இது தொடங்குகிறது. இந்த மாற்றங்களைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தை, நமது சமூகம் பெரும்பாலும் தவிர்க்கிறது. ஆனால், இளம் சிறுவர்களுக்கே இதுபற்றிய புரிதலை உருவாக்குவதற்கு மாதவிடாய் கல்வி அவசியம். இது பெண்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி, உடல் மாற்றங்களை ஆண்கள் புரிந்துகொள்ளச் செய்து, எதிர்காலத்தில் சமபங்கு மற்றும் மரியாதையுடன் கூடிய உறவுகளை உருவாக்க வழிவகுக்கும்.

மாதவிடாய் சுழற்சி பற்றிய தகவல், சுகாதார பராமரிப்பு, பாதுகாப்பான உடலுறவு மற்றும் இனப்பெருக்கம் குறித்த கல்வி, இளம் வயதில் வழங்கப்பட வேண்டும். பொதுவாக, 8-9 வயதில் சிறுவர்களுக்கு மாதவிடாய் பற்றிய அடிப்படை விளக்கங்களை பெற்றோர்கள் தொடங்கலாம். இது 11-13 வயதுக்குள் அந்த விளக்கங்களை விரிவுபடுத்தி, கருப்பை, யோனி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் பற்றிய அறிவினை கொடுக்க உதவும். சிறுவர்கள் பெண்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும்போது, கேலி, பின்தொடர்தல், தவறான கருத்துக்களைக் குறைக்கும்.
ஆண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசும்போது, உயிரியல் செயல்முறை என்பதையும், அது சோர்வும் வலியையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை தெளிவாக கூற வேண்டும். வயிற்றுப்பிடிப்பு, தலைவலி, மனநிலை மாற்றங்கள் என பல சவால்களைச் சந்திக்கும் பெண்கள், அதையும் மீறி தங்கள் பொறுப்புகளைச் செய்கிறார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். மாதவிடாய் என்பது வெறும் இரத்தப்போக்கு அல்ல; இது பெண்களின் மனதிலும் உடலிலும் நிகழும் ஒரு முழுமையான மாற்றம்தான்.
சமூகத்தில் நிலவும் தவறான எண்ணங்களை மாற்ற, சிறுவர்களிடம் ஆரம்பத்தில் இருந்து பேசவேண்டும். இது அவர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள உதவும். புரிதலின்றி வளரும்போது, அவர்கள் பெண்களின் அனுபவங்களை அவமதிக்கலாம். ஆனால் மாதவிடாய் பற்றி சரியான நேரத்தில் கூறப்படும் உண்மையான, நேர்மையான தகவல்கள், அவர்களின் அணுகுமுறையை நல்லதாக்கும். இது இருபாலருக்கும் சமபங்கு, புரிதல் மற்றும் மரியாதை கலந்த வாழ்விற்கு அடித்தளம் போடுகிறது.