தினமும் வீடு துடைக்கும் துடைப்பான் துணிகள், தூசி, எண்ணெய், கிருமிகள் மற்றும் உணவுக் கழிவுகள் போன்றவை ஒட்டியதால், சில நாட்களிலேயே கருப்பாக மாறி, துர்நாற்றம் வீசத் தொடங்கும். சோப்பால் கழுவினாலும், அது பழைய கறைகளை அகற்ற முடியாமல் போய், வீணாகிவிடும். ஆனால் இந்தத் துணிகளை வலுவான ரசாயனங்கள் இல்லாமல், வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களால் சுத்தம் செய்து மீண்டும் வெண்மையாக மாற்றலாம்.

இதைச் செய்வதற்கான முறை மிகவும் எளிதானது. வெந்நீருடன் வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பிறகு அந்த சூடான கலவையில், துணியை 20-25 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இடையே கிளறி, பின்னர் மெதுவாக தேய்த்து, தண்ணீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்த வேண்டும். இதனால் அந்த பழைய துணி சுத்தமாகவும் பளிச்செனவும் மாறும்.
வினிகர் பாக்டீரியாவைக் கொல்லும், எலுமிச்சை சாறு இயற்கையான பிளீச்சாக செயல்பட்டு கறைகளை நீக்கும், பேக்கிங் சோடா வெண்மையாக்கும். இந்த மூன்று சேர்க்கைகள் சூடான நீருடன் இணைந்தபோது, துணிக்கு எந்த சேதமும் இல்லாமல், அதன் இயற்கையான நிலையை மீட்டெடுக்க உதவும். இது பாதுகாப்பானதும், மலிவானதும், ஆபத்தின்றி பலனளிக்கும் முறையாகும்.
துடைத்த உடனேயே துணியை சோப்புடன் கழுவி, ஈரமாக வைத்துவைக்காமல், நேரடியாக வெயிலில் உலர்த்த வேண்டும். இது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கிறது. இந்த வழிமுறைகள் மூலம் உங்கள் துடைப்பான் துணிகள் புதியவை போல சுத்தமாக, நறுமணத்துடன் மாறும்.