சிறுநீரகம் நமது உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இது இரத்தத்தில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதோடு, மினரல்களின் சமநிலையை பராமரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது. எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.
தண்ணீரை போதுமான அளவில் குடிப்பது சிறுநீரகங்களுக்கு முதன்மை உதவியாகும். ஆனால் தண்ணீரைத் தவிர, சில இயற்கையான பானங்களும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அவை எளிதில் கிடைக்கக் கூடியவையும் அதிக செலவு இல்லாதவையும் ஆகும்.

எலுமிச்சை தண்ணீர் சிறுநீரகக் கற்களைத் தடுக்க உதவுகிறது. மூலிகை டீ மற்றும் கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தவை; அவை சிறுநீரகங்களில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். பாதாம், ஓட்ஸ், தேங்காய் போன்ற தாவர அடிப்படையிலான பால், பசு பாலை விட சிறுநீரகத்திற்கு குறைந்த சுமையைக் கொடுக்கிறது. ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கேரட் போன்ற பழங்கள், காய்கறிகளால் செய்யப்பட்ட குறைவான சர்க்கரை ஸ்மூத்திகள் கூடுதல் நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தருகின்றன.
மேலும், இயற்கை இளநீர் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்ததால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. அது சிறுநீரின் அளவை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.