நமது உடல் பல்வேறு சிக்னல்களின் மூலம் ஆரோக்கியத்தைப் பற்றி முன்னறிவிப்பு தருகிறது. அதில் பாதங்கள் மிக முக்கியமானவை. பாதங்களில் தோன்றும் சில மாற்றங்கள் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை ஆரம்பத்திலேயே காட்டக்கூடியவை. இவற்றை கவனிக்காமல் விட்டால், காலப்போக்கில் பெரிய சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகம்.
வைட்டமின் பி12 மற்றும் பி6 குறைபாடு ஏற்பட்டால், பாதங்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரியும் உணர்வு போன்றவை தோன்றும். தொடர்ந்து குளிர்ச்சியாக இருப்பதும், நரம்புகளில் சேதம் ஏற்படும் அபாயத்தையும் காட்டுகிறது. அதேபோல் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக பாதங்கள் குளிர்ச்சியடையும். இதை சரிசெய்ய கீரை, பருப்பு, சிவப்பு இறைச்சி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.

பாதங்களில் காயங்கள் அல்லது புண்கள் மெதுவாக குணமடைவது, வைட்டமின் சி மற்றும் ஜின்க் குறைபாட்டின் அடையாளமாகும். இவை இல்லாமல் இருந்தால் காயங்கள் நீண்டநேரம் குணமாகாமல், தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். அதே சமயம், ப்ரோடீன் குறைவால் பாதங்களில் வீக்கம் ஏற்படலாம். இது உடலில் உப்பு மற்றும் தண்ணீர் அதிகமாக தேங்குவதற்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உணவில் சீரான ஊட்டச்சத்துகளைச் சேர்த்தால் உடல்நலத்தை மேம்படுத்த முடியும். பாதங்கள் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்பதால், அவற்றில் தோன்றும் சிறிய மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.