நீங்கள் இளமையாகவே இருக்க ஒரு குறிப்பிட்ட வைட்டமின் உதவுவதாக சொன்னால் நம்புவீர்களா? ஆனால் இது உண்மை. மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனை மற்றும் மெடிக்கல் காலேஜ் ஆஃப் ஜார்ஜியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வைட்டமின் D தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வது, வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர்.

வயதாகும் போது, நம் குரோமோசோம்களின் முனையில் உள்ள டீலோமியர்கள் குறைய ஆரம்பிக்கின்றன. இது இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் பல வயது சார்ந்த பிரச்சனைகளுடன் தொடர்புடையது. டீலோமியர்கள் குறுகுவது, நம் செல்கள் பழுதடைவதற்கான முதல் அடிக்களமாகும். வைட்டமின் D இந்த குறைவை தாமதப்படுத்தும் திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என 1000 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தினமும் 2000 IU அளவில் வைட்டமின் D3 மற்றும் 1 கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த இந்த ஆய்வின் முடிவில், வைட்டமின் D சப்ளிமெண்ட் எடுத்தவர்கள் டீலோமியர்கள் குறையும் விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்தது.
இது செல்களின் மூப்பை மூன்று வருடங்களுக்கு தள்ளிவைக்க முடிந்தது என்பதை உணர்த்துகிறது. ஆனால், ஒமேகா-3 இதுபோன்ற தாக்கம் இல்லை என்பதை இந்த ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில், வைட்டமின் D எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை மற்றும் வீக்கம் குறைக்கும் திறன் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
‘VITAL’ எனப்படும் இந்த ஆய்வு, வைட்டமின் D டீலோமியர்களை பாதுகாக்கும் திறன் கொண்டதா என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய மற்றும் நீண்ட கால சோதனையாகும். இவ்வாறு, வைட்டமின் D ஒரு தனித்துவமான ஊட்டச்சத்து என்பதை ஆதரிக்கும் மேலும் பல ஆதாரங்கள் சமீப காலங்களில் வெளிவந்துள்ளன.
‘சன்ஷைன் வைட்டமின்’ என அழைக்கப்படும் வைட்டமின் D, நம் உடலுக்கு சூரிய ஒளியின் மூலமாக கிடைக்கிறது. இது எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. வைட்டமின் D குறைவாக இருந்தால் எலும்புகள் பலவீனமாகி உடைய வாய்ப்பு அதிகம். மேலும், இது மனநலத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
வைட்டமின் D குறைபாடுகள், மனச்சோர்வு, உடல் சோர்வு, மூளை செயல்பாட்டின் மந்தநிலை போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த வைட்டமின் கொழுப்பு மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்ற உணவுகளில் இயற்கையாகக் கிடைக்கிறது. சப்ளிமெண்ட் வடிவத்தில் எடுக்க நினைப்பவர்கள், மருத்துவர் ஆலோசனை பெற்று தேவையான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளமை, ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை நீடிக்க விரும்பும் ஒவ்வொருவரும், இந்த வைட்டமினை தவறாமல் கொண்டிருப்பது நல்ல முடிவாக அமையும்.