மனித உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள், முதலில் பாதங்கள் மூலம் அறிகுறிகளை காட்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, பாதங்களை கவனமாகப் பார்த்தால் உங்கள் முழு ஆரோக்கிய நிலையை அறிய முடியும். குறிப்பாக கணுக்காலில் நீடித்த வலி அல்லது வீக்கம் இருந்தால், அது சாதாரண பிரச்சனையாக இருக்காமலும், ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சில நேரங்களில் அதிகமாக நடப்பது, நிற்பது அல்லது காயம் ஏற்படுவது காரணமாக கணுக்கால் வலி வரும். ஆனால் இது நீண்ட நாட்கள் நீடித்தால், அது கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது இதய செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளை சுட்டிக்காட்டக்கூடும்.
மழைக்காலம் போன்ற ஈரப்பதமான காலநிலையிலும், ரத்த நாளங்கள் விரிவடைந்து, எடிமா எனப்படும் வீக்கம் ஏற்படலாம். வீங்கிய கால்கள் அல்லது கணுக்கால், தோல் பளபளப்பாக தோன்றுதல், அழுத்தும் போது வலி, மூட்டு விறைப்பு போன்றவை பெரிய எச்சரிக்கை சின்னங்கள்.
கல்லீரலில் அதிக கொழுப்பு தேங்கும் போது “ஃபேட்டி லிவர்” ஏற்படுகிறது. இது கல்லீரல் வீக்கம், சிரோசிஸ், புற்றுநோய் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால், போர்டல் நரம்பில் அழுத்தம் அதிகரித்து, கால்களில் வீக்கம் உண்டாகிறது. அதேபோல் இதயம் சரியாக செயல்படாதபோது, இரத்தம் சீராக பம்ப் செய்ய முடியாமல், பாதங்களில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு கூடுதலாக மூச்சுத் திணறல், சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து காணப்படும்.
இத்தகைய பிரச்சனைகளை குறைக்க சில எளிய வழிகள் உள்ளன. ஓய்வெடுக்கும் போது கால்களை இதய உயரத்திற்கு மேல் வைத்திருப்பது, நீண்ட நேரம் அசையாமல் உட்காராமலும் நிற்காமலும் இருப்பது, கம்பிரஷன் சாக்ஸ் அணிவது, உப்பு உட்கொள்ளலை குறைப்பது போன்றவை உதவும்.
எனவே, உங்கள் பாதங்கள் கொடுக்கும் சிக்னல்களை தவறவிடாமல் கவனிக்க வேண்டும். அவை உடல் நலனுக்கான ஆரம்ப எச்சரிக்கை மணியாக செயல்படுகின்றன.