செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் பண்டைய மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாகும். இது உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியது. ஆயுர்வேதக் கோட்பாடின்படி, 8 முதல் 10 மணி நேரம் ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பதன் மூலம் அதில் மிக நுண்ணிய செம்புத் துகள்கள் கரைய வாய்ப்பு உள்ளது. அந்த துகள்கள் உடலுக்குள் நுழைந்து நோய்களை எதிர்க்கும் சக்தியை அதிகரிக்கும், மேலும் உடல் முழுவதும் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

இன்றைய வாழ்க்கை முறையில் அதிகரித்து வரும் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சிக்கல்கள் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு செம்பு நீர் ஒரு இயற்கையான தீர்வாக இருக்கலாம். தாமிரத்தில் உள்ள தன்மை இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை கட்டுப்படுத்தி, “கெட்ட” கொழுப்புகளை குறைத்து “நல்ல” கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதயத் தமனிகள் சுத்தமாக இருப்பதுடன், தடுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
அதேவேளை, அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் 2012ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் ஈ.கோலை போன்ற தீவிரமான பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக இந்த நீர் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
செம்பு நீர் உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கல்லீரலையும் சிறுநீரகங்களையும் நச்சு பொருட்களிலிருந்து சுத்தம் செய்ய உதவுகிறது. மலச்சிக்கல், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருந்து வருபவர்களுக்கு இது நிவாரணமாக அமைகிறது. சருமத்தின் பளிச்சிடும் தோற்றத்தையும் இது மேம்படுத்துகிறது. முகப்பரு, தழும்புகள் மற்றும் தோல் தொற்றுகள் ஆகியவற்றிலும் இது நன்மை அளிக்கிறது.
செம்பு நீர், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி காய்ச்சல், சளி மற்றும் தொற்று ஏற்படுபவர்களுக்கு இது ஒரு இயற்கை டானிக்காக பயன்படுகிறது. அதனுடன், வளர்சிதை மாற்றத்தை தூண்டும் பண்புகளால், உடலில் தேக்கமாக இருக்கும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. இதன்மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தும் முயற்சிகளிலும் இது ஆதரவாக இருக்கலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் செம்பு நீர் குடிப்பது மிகவும் நல்லது என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதற்காக, இரவு தூங்குவதற்கு முன் ஒரு சுத்தமான செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும். மேலும், அந்த பாத்திரத்தில் பச்சை படலம் வளராதிருக்க, ஒவ்வொரு வாரமும் ஒரு முறை எலுமிச்சை சாறு, உப்பு அல்லது புளித் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உடலுக்கு தேவையான சக்தி, நோய் எதிர்ப்பு திறன் மற்றும் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும் என்பதே ஆயுர்வேதத்தின் நம்பிக்கை. ஆனாலும், இதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையும் பெறுவது பாதுகாப்பானது.