பேரீச்சம் பழம் இனிப்பானதாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் அளவற்றவை. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு போன்ற கனிமச்சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஃபினோலிக்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்டு ஆகிய சத்துக்களும் இதில் உள்ளன. மேலும் பேரீச்சையில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், மூளை, இதயம், எலும்புகள் போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

பொதுவாக இனிப்பு காரணமாக நீரிழிவு நோயாளிகள் பேரீச்சையைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது தவறான புரிதல் என்று இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹப் விளக்குகிறார். அவரது கூற்றுப்படி, 100 கிராம் பேரீச்சையில் 54 கிராம் சர்க்கரை இருந்தாலும் அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
இதற்கான காரணம் பேரீச்சையின் கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதுதான். உணவின் கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருந்தால், அதில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென உயராது. அதனால் தான் பேரீச்சை நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
மேலும் பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து உணவின் செரிமானத்தை மெதுவாக நடத்துகிறது. இதனால் இரத்த சர்க்கரை நிலை திடீர் உயர்வு அடையாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அதோடு ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் மினரல்கள் கொண்ட பேரீச்சை, குடல் ஆரோக்கியத்துக்கும் கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
எனவே, பேரீச்சையின் இனிப்பு சுவையைப் பார்த்து பயப்பட தேவையில்லை. சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அது நீரிழிவு நோயாளிகளுக்குக் கூட நன்மை தரக்கூடிய ஆரோக்கிய உணவாகும்.