நாம் தினசரி குடிக்கும் டீயை முதன்முதலில் கி.மு 3ஆம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு கி.மு 800களில், இந்த டீ அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. பின்னர் ஜப்பானிலிருந்து மற்ற நாடுகளுக்கு இந்த டீ பரவியது. டீ வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்தியர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருந்து வருகிறது.

தமிழகத்தில் டீயை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஏனென்றால், அந்த அளவிற்கு இந்த டீ ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளன. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் டீயை தவிர்க்க முடியாது. வேலை தேடி வெளியூருக்கு செல்லும் இளைஞர்களுக்கு ஒரு வேலை உணவாகவே இந்த டீ இருந்திருக்கும்.
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல், ஒரு நாளைக்கு ஒரு அல்லது இரண்டு டீ குடிப்பதால் தவறொன்றும் இல்லை. ஆனால் அதிக அளவில் டீ குடிப்பது நிச்சயமாக உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில், டீயை முற்றிலும் தவிர்த்தால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருப்பதால், உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதுடன், மன அழுத்தம் குறைகிறது. டீயில் டையூரிடிக் (Diuretic) தன்மை இருப்பதால், அதிக அளவில் டீ குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, டீயை நிறுத்துவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும்.
மேலும், டீ குடிப்பதை நிறுத்துவதால் உடலில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்களின் அளவு குறையும். இதனால் செரிமான பிரச்சனைகள், புற்று நோய்கள் போன்றவை குறைய வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதேசமயம், டீ குடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பதால் சிலர் உடலில் மாற்றங்களை உணரக்கூடும். டீ குடிப்பதால் ஓய்வு மற்றும் சௌகரியம் கிடைப்பவர்கள், திடீரென டீயை நிறுத்தும் போது மன அழுத்தம் மற்றும் மந்தநிலை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். சிலருக்கு சோர்வு, தலைவலி, தூக்க கலக்கம், கவனிக்க முடியாத நிலை போன்றவை ஏற்படலாம்.
ஆனால், இந்த அறிகுறிகள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். உடல் டீ இல்லாமல் பழகிக்கொண்டவுடன், இந்த பக்க விளைவுகள் மறைந்துவிடும். மேலும், டீயை தவிர்ப்பதன் மூலம் உடலின் இயல்பு மேம்படும். தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, நீர்சத்து குறைபாடு போன்றவை படிப்படியாக குறையும்.
இதனால், டீயை அளவோடு குடிப்பது மட்டுமே உடலுக்கு நல்லது. அதிகப்படியான டீயை தவிர்ப்பது உடல்நலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, டீ அருந்துவதை ஒரு கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.