சியா விதைகள் என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த இயற்கை உணவு. சால்வியா ஹிஸ்பானிக்கா என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் இந்த விதைகள், சிறிய அளவில் இருந்தாலும் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நம்முடைய உடலின் பல முக்கிய செயல்களில் உதவுகின்றன.
2 வாரங்களுக்கு தொடர்ந்து சியா விதைகளை உணவில் சேர்த்தால், உடலில் பல நன்மைகளை காண முடியும். இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், செலினியம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற முக்கிய கனிமங்கள் அதிகமாக உள்ளன.

அதேசமயம், இதில் ஆல்ஃபா லீனோலேனிக் அமிலம் எனப்படும் ஓமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோய், புற்றுநோய் மற்றும் உடலில் வீக்கம் ஏற்படும் அபாயம் குறைகிறது.
இந்த ஓமேகா-3, உடலில் உள்ள ஓமேகா-6 கொழுப்பு அமிலத்துடன் சமநிலையை ஏற்படுத்துகிறது. இது உடலில் பாலைன்ஸ் நிலையை ஏற்படுத்தி, செல்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது.
சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தி, செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கின்றன. இது பல்வேறு ஆட்டோஇம்யூன் நோய்கள் மற்றும் புற்றுநோய்களை தடுப்பதில் பங்கு வகிக்கிறது.
2 டேபிள்ஸ்பூன் சியா விதைகள் 138 கலோரிகள், 4.7 கிராம் புரதம், 9.8 கிராம் நார்ச்சத்து, 5 கிராம் ஓமேகா-3 கொழுப்பு அமிலம் போன்றவற்றை வழங்குகிறது. இது ஒரு நாள் தேவைக்கான 23% மெக்னீசியம், 14% கால்சியம், 12% இரும்புச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.
சியா விதைகள் தண்ணீரில் ஊறவைக்கப்படும் போது தங்களின் எடையை விட 12 மடங்கு தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதுடன், நீண்ட நேரம் பசியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறைவதோடு, குடல் நுண்ணுயிரிகளை சீரமைக்கும்.
தொடர்ச்சியாக சியா விதைகளை உணவில் சேர்த்தால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு இது சிறந்த ஆதரவாக அமையும்.
மேலும், இதில் உள்ள ஓமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை குளோயிங் மற்றும் ஆரோக்கியமாக மாற்றுகின்றன. முகப்பருக்கள், உலர்ச்சி போன்ற பிரச்சனைகள் குறையும்.