மெல்போர்னில் வசித்த கிறிஸ்டினா லாக்மேன் என்ற 32 வயது பெண், அதிக அளவு காஃபின் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புகள் வந்ததும் அவசர சேவைக்கு பல முறை கால் செய்தபோதும், தேவையான உதவி மிகுந்த தாமதத்திற்குப் பிறகே வந்தது. நிபுணர்கள் கூறுவதாவது, உடனடியாக மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியுமென்கிறார்கள்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின்படி, ஒரு நாளில் ஒரு பெரியவருக்கு 400 மில்லிகிராம் வரை காஃபின் பாதுகாப்பான அளவாக கருதப்படுகிறது. இது சுமார் 4 முதல் 5 கப் காபிக்கு சமம். ஆனால் ஒவ்வொருவரின் உடல்நிலை, வயது மற்றும் பழக்கவழக்கத்தை பொறுத்து இந்த அளவு மாறக்கூடும். இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் தூக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
FDA கூறுவதாவது, ஒரு நாளில் 1,200 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு காஃபின் உட்புகுத்தும்போது வலிப்பு, தலைவலி, தூக்கமின்மை மற்றும் இறப்பும் ஏற்படக்கூடும். காஃபி மட்டுமல்ல, எனர்ஜி டிரிங்க்ஸ், ப்ரோடீன் பவுடர்கள், மருந்துகள், ஐஸ்கிரீம், சூயிங் கம் போன்ற பல தயாரிப்புகளிலும் காஃபின் மறைந்திருக்கும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தூக்கம் குறைதல், பதட்டம், நெஞ்சில் அடைப்பு, குமட்டல், இரத்த அழுத்தம், மற்றும் தலைவலி ஆகியவை காஃபின் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது ஏற்படக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகளாகும். எச்சரிக்கையாக மற்றும் பரிமிதமாக காஃபியை உட்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களின் லேபிள்களை சரிவர படித்து அதன் உள்ளடக்கங்களை அறிந்து சிக்கலற்ற பயன்பாடையே விரும்பவேண்டும்.