சென்னை: நீங்கள் தூங்கும்போது குறட்டை விட இந்த விஷயங்கள்தான் காரணம் என்பது தெரியுமா..? தெரிந்து கொள்வோம்.
நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட முழுமையான தூக்கத்தை தூங்கிவிட முடியாது.
குறட்டை எப்படி உருவாகிறது? : வாய் மற்றும் மூக்கு இடையிலான சுவாசப் பாதையானது தூங்கும்போது அடைபடுவதன் காரணமாக குறட்டை சத்தம் உண்டாகிறது. இந்த அடைப்பு எதனால் ஏற்படுகிறது, அதற்கு நாம் எந்த வகையில் காரணமாக அமைகின்றோம் என்பதை பார்க்கலாம்.
தொண்டை அமைப்பு காரணமாக இருக்கலாம்: நம் தொண்டை அமைப்பு கூட நமக்கு குறட்டை வருவதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு குட்டையான கழுத்து மற்றும் தடிமனான சருமம் அல்லது குரல் வளையை ஒட்டி சதை தொங்குவது, உள்நாக்கு வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக குறட்டை சத்தம் கேட்கலாம்.
உடல் பருமன்: உடல் பருமன் உடையவர்களை பார்த்தாலே இவர்களெல்லாம் நன்றாக குறட்டை விட்டு தூங்குபவர்கள் என்ற முன் முடிவுக்கு நாம் வந்துவிடுவோம். அது ஓரளவுக்கு உண்மை தான். கழுத்து மற்றும் குரல்வலை பகுதியை சுற்றிய அதிகப்படியான தசைகளும் கூட குறட்டைக்கு காரணமாக அமைகின்றன.
வயது: முடி உதிர்தல், சருமம் சுருக்கம் அடைதல் போன்றவை மட்டும் வயோதிகத்திற்கான அறிகுறிகள் அல்ல. குறட்டை விடுவதும் கூட வயோதிகத்தின் அறிகுறி தான். குரல்வலை பகுதியின் தசைகள் பலவீனம் அடைவதன் காரணமாக குறட்டை சத்தம் வரலாம்.
மூக்கு அடைப்பு: அலர்ஜி, சைனஸ் தொற்று அல்லது மூக்கு உள்ளே சதை வளர்ச்சி போன்றவை காரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் காற்று சுவாசப் பாதையில் தடை ஏற்படும் நிலையில் அதன் காரணமாக உங்களுக்கு குறட்டை ஏற்படலாம்.