இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற ஸ்கிரீன் சாதனங்களைப் பயன்படுத்தாமல் ஒருநாளைக் கழிப்பது பெரும்பாலானோருக்கு சாத்தியமில்லை. ஆனால் இதனால் கண்களில் ஏற்படும் வறட்சி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்குத் தற்காலிக நிவாரணம் தேடி பலர் சொட்டு மருந்துகளை (eye drops) பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுவே ஒரு நிரந்தர தீர்வு என நம்பி தொடர்ந்து பயன்படுத்துவது தவறான பழக்கமாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஸ்கிரீனைப் பார்ப்பதால் கண்களை நாம் இயல்பாக சிமிடும் விகிதம் 60% வரை குறைகிறது. இதன் விளைவாக கண்ணீரானது விரைவில் ஆவியாகி கண்கள் உலர்ந்துபோகின்றன. சிலருக்கு சொட்டு மருந்துகள் கூடவே எந்த விளைவையும் தராமல் போகிறது. காரணம் – அவர்களுடைய கண்ணீரின் தரம் மோசமாக இருக்கலாம் அல்லது அவர்களின் கண்கள் தேவையான அளவு சிமிடுவதில்லை. எனவே, மருந்துகள் பல நேரங்களில் வேலை செய்யாது.
இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் நிபுணர்கள் “20-20-20 விதி” என்பதை கடைப்பிடிக்க பரிந்துரை செய்கிறார்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடிகள் தொலைவில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்ப்பது கண்களுக்கு ஓய்வளிக்கிறது. இதுடன், ஸ்கிரீனின் பிரைட்னஸை குறைத்தல், ப்ளூ லைட் ஃபில்டர்களை பயன்படுத்துவது, கண்களை அடிக்கடி சிமிடுவது மற்றும் வெதுவெதுப்பான கம்பளியால் மென்மையாக அழுத்துவது போன்றவை கண் நலம் மேம்பட உதவும்.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் சொட்டு மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சில சமயங்களில் மருந்துகள் தேவையாக இருக்கலாம், ஆனால் அது நிபுணரின் பரிந்துரையுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கண்களில் ஏற்படும் எரிச்சலோ வறட்சியோ ஒரு எச்சரிக்கைச்சின்னம் என்பதை புரிந்துகொண்டு, தொடக்கத்திலேயே சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஸ்கிரீன் நேரத்தை கட்டுப்படுத்தி, கண்களுக்கு தேவையான ஓய்வையும் கவனத்தையும் கொடுத்தால் நீண்ட காலத்தில் கண் பிரச்சனைகள் இல்லாத வாழ்கையை பெற முடியும்.