சென்னை: காலையில் இஞ்சி , நண்பகல் சுக்கு, இரவு கடுக்காய் என்பது சித்தர்கள் வாக்கு. அந்த வகையில் காலை எழுந்ததும் நாம் குடிக்கும் தேநீரில் இஞ்சியை சேர்த்து குடித்து வர பலவிதமான தொல்லைகளிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்படையலாம்.
ஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு , மன அழுத்தத்தையும் குறைப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவேளையாவது இஞ்சி டீயை குடித்து வந்தாலே நமது செரிமான உறுப்புக்கள் தூண்டப்பெற்று உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம்.

மன அழுத்தம் மற்றும் கோபத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. இந்த சமயங்களில் வெந்நீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளை போட்டு குடிக்க மன அழுத்தத்தில் இருந்து பெரிய அளவில் விடுபடலாம்.
மனதில் குழப்பங்கள், கவலைகள் ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதை இஞ்சி சரிசெய்யும். மலச்சிக்கல், சுவாசத் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து ரத்தச் சுழற்சியை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு, முதுகுவலி, வயிற்று வலியிலிருந்தும் நிவாரணம் அடைய செய்கிறது. தாங்க முடியாத அளவில் வயிற்று வலி இருப்பவர்கள் இஞ்சிச் சாறில் நன்றாக நனைத்த துணியை வயிற்றின் மீது வைத்துக் கொள்ள சிறிது, சிறிதாக நிவாரணம் பெறலாம்.
தினசரி உணவுகளில் இஞ்சிக்கு உரிய இடம் கொடுப்போம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்